×

கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 40 மணிநேரம் தவித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது

*சொந்த ஊர் திரும்பிய தஞ்சாவூர் இளைஞர் பேட்டி

தஞ்சாவூர் : ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் 15 கி.மீ.தூரம் தண்டவாளத்தில் நடந்து வந்து ஊருக்கு திரும்பியதாக தஞ்சாவூர் வாலிபர் தெரிவித்தார்.தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் கடந்த 17ம்தேதி பெய்த கனமழையால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த 400க்கு மேற்பட்ட பயணிகள் ரயிலுக்குள்ளேயே தவித்தனர். இதையடுத்து 40 மணி நேரத்திற்கும் மேலாக தவித்த பயணிகள் பலர் நேற்றுமுன்தினம் தண்டவாளம் வழியாக 15 கி.மீ., தூரம் நடந்து வந்து ஊருக்கு சேர்ந்தனர். இதேபோல தஞ்சாவூர் கருப்ஸ் நகரை சேர்ந்த வினோத் (34) என்பவரும் நடந்து வந்து ஊர்சேர்ந்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுகிழமை திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் ரயில்நிலையம் வந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு திரும்பியபோது, ரயில் இரவு 9.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. அதன்பிறகு ரயில் புறப்படவில்லை. அப்போது நள்ளிரவு 12 மணிக்கு ரயில் கேன்சல் என மெசேஜ் வந்தது.
அங்கு வந்த சிலர், கனமழை காரணமாக ஏரி உடைந்து விட்டது என கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் வேறு. ஒரு சிலரை உறவினர்கள் வந்து அழைத்து சென்றனர். அதன் பிறகு யாரும் வரவில்லை. இந்நிலையில் மறுநாள் திங்கள்கிழமை (18ம் தேதி) காலை புதுக்குடி என்ற ஊரில் மூதாட்டி ஒருவர் சுக்குமல்லி காபி போட்டு எடுத்து வந்து ரயிலில் இருந்த குழந்தைகளுக்கு கொடுத்தார். பின்னர் அவர் மூலம், புதுக்குடி கிராமத்தினர் அங்கிருந்த காளியம்மன் கோயிலில் இருந்த பொருள்களை வைத்து சமைத்துக் கொடுத்தனர்.

பின்னர் நேற்றுமுன்தினம் அதிகாலை, திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர், செய்துங்கநல்லூர் என்ற இடத்தில், தனது காரை நிறுத்தி விட்டு, தண்டவாளத்திலேயே 15 கிலோ மீட்டர் நடந்து ஸ்ரீவைகுண்டம் வந்து தனது பெற்றோர், உறவினரை அழைத்து சென்றார்.

அவர் அளித்த நம்பிக்கையால், அரசு தரப்பிலிருந்தும், ரயில்வே தரப்பிலிருந்தும் உணவு கொடுக்க முன் வந்தனர். இந்நிலையில், காலை 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தண்டவாளத்திலேயே 15 கிலோ மீட்டரை நான்கு மணி நேரம் நடந்து ஊருக்கு திரும்பினேன். என்னுடன் பலரும் வந்தனர். அடுத்து என்ன நடக்கும் எனத்தெரியாமல், 40 மணி நேரத்திற்கு மேலாக தவித்த தவிப்பு ரயிலில் இருந்த பயணிகளுக்கு மட்டுமே தெரியும். அதை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றார்.

The post கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 40 மணிநேரம் தவித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது appeared first on Dinakaran.

Tags : Srivaikundam railway station ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே...